- ஆழ்வார்திருநகரியில் நம்மாழ்வார் பெருமாளுக்கு நிகரான அந்தஸ்தில் போற்றப்படுகிறார்.
- தெப்பத்தில் எழுந்தருளி நம்மாழ்வார் வலம் வந்து சேவை சாதித்தார்.
திருநெல்வேலி அருகே தாமிரபரணி ஆற்றின்கரையில் அமையப்பெற்றுள்ள நவதிருப்பதி கோவில்களில் 9-வது திருப்பதியும், 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்குவதுமான ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் பெருமாள் / நம்மாழ்வார் திருக்கோவிலில் மாசித் திருவிழா கடந்த 12/02/2022 அன்று கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது.
பெருமாளுக்கு நிகராக தனி பெரும் அந்தஸ்துடன் இங்கு எழுந்தருளியிருக்கும் நம்மாழ்வார் இந்த ஸ்தலத்தின் சிறப்பு மூர்த்தி ஆவார். இந்த நம்மாழ்வார் திருமேனி தாமிரபரணியில் இருந்து மாசி மாதம் விசாக நட்சத்திரத்தன்று சுயம்பு மூர்த்தமாக கிடைக்கப்பெற்றது. இதனை ஒட்டி மாசி மாதத்தில் பதிமூன்று நாட்கள் திருவிழா வருடம் தோறும் விமரிசையாக இங்கு நடைபெற்று வருவது சிறப்பம்சம் ஆகும்.
மாசி திருவிழாவின் பன்னிரெண்டாம் இருநாளான நேற்று மாலை சுவாமி நம்மாழ்வார் சிறப்பு அலங்காரத்தில் கோவிலில் இருந்து புறப்பட்டு, தெப்பக்குளத்தில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தேரில் எழுந்தருளி தெப்பத்தில் வலம் வந்து சேவை சாதித்து அருளினார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.
Image source: dailythanthi.com