செய்தி குறிப்புகள்
- நெல்லை மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தில் அயல்நாட்டு வேலை வாய்ப்புகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது
- கொரோனாவிற்கு பிறகு வேலை வாய்ப்பு வெளிநாடுகளில் அதிகரித்து உள்ளது என அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிர்வாக இயக்குனர் மகேஸ்வரன் கூறினார்.
திருநெல்வேலி மாவட்டம் தமிழ்நாடு அரசு வனத்துறை முண்டத்துறை- களக்காடு புலிகள் காப்பகம் சூழல் மேம்பாட்டு கோட்டம் சார்பில் அயல்நாட்டு வேலை வாய்ப்புகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சூழல் இளையோர் விளையாட்டு மன்றம் தொடங்குதல் மற்றும் விளையாட்டு உபகரணம் வழங்கும் நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
மாவட்ட ஆட்சியாளர் விஷ்ணு தலைமை தாங்கினார் . களக்காடு முண்டத்துறை புலிகள் காப்பக துணை வன பாதுகாவலர் அன்பு முன்னிலை வகிக்க , அரும்புகள் அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் ராஜ . மதிவாணன் வரவேற்புரை நிகழ்த்தினார்.
தமிழக அரசு நிறுவனமான அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவன நிர்வாக இயக்குனர் மகேஸ்வரன் சூழல் இளையோர் விளையாட்டு
மன்றங்களை சேர்ந்தவர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கினார். அறக்கட்டளை இயக்குனர் லதா மதிவாணன் வெளிநாட்டின் வேலை வாய்ப்பு விழிப்புணர்வு பற்றி பேசினார். திருக்குறுங்குடி சூழல் வனசரகர் யோகேஸ்வரன் நன்றி கூறினார்.
கூட்டத்திற்கு பிறகு அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவன நிர்வாக இயக்குனர் மகேஸ்வரன் அவர்கள் பேசியதாவது ;
வெளிநாடுகளில் கொரோனாவிற்கு பிறகு வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது வெளிநாட்டிற்கு வேலை செய்ய விரும்புவோர் www.omcmanpower.com எனும் இந்த இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளுங்கள்.
இப்பொழுது எங்கள் நிறுவனம் மூலமாக குவைத்தில் செவிலியர்கள் 500 பேர் , மற்றும் துபாயில் வீட்டு வேலை செய்ய 500 பேர் வேலைக்கு எடுப்பதற்கு ஒப்பந்தம் எடுக்கப்பட்டு அதற்கான ஆள் எடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.
வெளிநாடுகளில் வேலை வாய்ப்பு அதிகரிப்பதால் தொடர்ந்து அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம்.
அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் ஆங்கிலம் பேசக்கூடியவர்கள் வேலை செய்ய வேண்டும் என்றால் அவர்களின் மொழி உச்சரிப்புக்கு ஏற்ப மொழி பற்றிய திறன் அறிந்திருக்க வேண்டும்.
வேலைக்கு செல்பவர்கள் அந்தந்த நாடுகள் வைக்கப்படும் மொழி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஆகையால் சென்னை, மதுரை ,திருச்சி நாமக்கல் போன்ற இடங்களில் செவிலியர் கல்லூரிகளில் இதற்கான சிறப்பு பயிற்சிகள் கொடுக்கப்பட்டு வருகிறது . தமிழ்நாடு அரசு இதற்காக ரூபாய் 87 லட்சம் நிதி உதவி செய்துள்ளது என்று நிர்வாக இயக்குனர் மகேஸ்வரன் கூறினார்.
நெல்லை மாவட்டத்தை சேர்ந்த வனக்குழுவினர் மற்றும் மலையோர கிராம மக்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.