ஆடிப்பூரம் அற்புத தினத்தில் அம்பாளை வழிபடும் முறை
அம்பாளின் தரிசனம் ஆடிப்பூரம் ஊஞ்சல் உற்சவம்
பூரண நிலவு அமபிகையாய் ஆயிரம் கண்ணுடையாள் வண்ண மலர் ஊஞ்சலில் ஆனந்தமாய் ஆடுகின்றாள் தாலேலோ.
பச்சை பட்டுடுத்தி பவளவாய் மலர்ந்து, மதுரமாய் சிரிக்கின்றாள் தாலேலோ!
மூக்குபல்லாக்கு ஜொலிஜொலிக்க, முத்து பவளம் வைரநகை மின்னுகையில் அதைக்கண்ட நம் மனமும் மலர்ந்திடவே தாலேலோ!
மல்லிகை மலர் மாலை கழுத்தினிலே அலங்கரிக்க மங்களமாய் ஆடுகின்றாள் தாலேலோ!
ஆனந்த தருணத்தில் அகம் முழுதும் அளவிலா மகிழ்ச்சி ததும்புதம்மா தாலேலோ
பழத்தட்டோ பலவிதமாய் கண்ணாடி வளையல்கள் கலகலக்க, மஞ்சள் குங்குமம் தாலி சரடு சீரோடு காட்சி தரும் அம்பாளின் அழகை நான் காண என்ன தவம் செய்தேனோ தாலேலோ!
ஆடிப்பூரம் அம்பாளின் ஊஞ்சல் உற்சவத்தை பாடி மனமகிழ்ந்த ஆடிப்பூரம் அன்று வழிபடும் முறையைப் பற்றி காண்போம் .
அம்மனுக்கு திருவிழா . திருமணம் , தாலிபாக்கியம் ,மஞ்சள், குங்குமம், வளையல், என மங்கல பொருட்களுக்கு மகத்துவம் தரும் பொன்னாள் என திகழ்வது ஆடிப்பூரம்.
உலகத்தை எல்லாம் காத்து அருளக்கூடியவள் அம்பிகை . அவளுடைய அவதார திரு நாள் ஆடிப்பூரம்.
உமாதேவி பிறந்தநாள். ஆண்டாள் அவதரித்த நாள். அம்பிகை கன்னிகையாக மலர்ந்த நாள் எனும் சிறப்பான நாளை நினைவு கூறும் தினம் ஆடிப்பூரத் திருநாள்.
அன்றைய நாளில் அதிகாலை துயில் எழுந்து அம்பாளின் அருள்முகம் நினைவு கூர்ந்து கங்கா ஸ்நானத்தில் புனிதம் பெற்று, பட்டு புடவை , மஞ்சள் குங்குமம் மலர்தனை சூடி மங்கலமாய் காட்சி தருதல் சிறப்பு.
அம்பாளின் உருவ சிலை அல்லது படத்தினை துடைத்து, மஞ்சள் குங்குமம், மலர் வைத்து துன்பம் எனும் இருள் விலகி சுபீட்சம் எனும் ஒளி பெற, தீபம் தனை ஏற்றி வழிபடுதல் சிறப்பு.
பாலோடு தேன் கற்கண்டு சேர்த்து நெய்வேத்தியம் படைத்து இரு கை கூப்பி மனம் முழுதும் மங்கள நாத ஓசையை உள் உணர்க. "ஓம் அம்பாளே போற்றி" எனும் நாமத்தினை 27 முறை சொல்வதில் உவகை பெறுதல் சிறப்பு.
ஒரு டஜன் வளையல் மஞ்சள் குங்குமம் தாலி சரடு மலர் வைத்து பூஜை அறையில் அம்பாளின் முன்பாக வைத்து வழிபடுவதும் சிறப்பு. கோவிலில் வளையல் மாலை முடிந்தால் அம்மனுக்கு சூடி மகிழ்வதும் சிறப்பு.
புத்தம் புதிதாய் பூத்த மலர் போல இனிப்பில் சிறந்த பழுத்த பழம் போல, கனிவான சொல்லில் கட்டுப்பட்டு மயங்கும் மனம் போல, மங்கல இசை ஒலியான நாதம் போல என்றென்றும் சிறப்பாய் தம்பதியர் வாழ்க்கையில் இனிமை கண்டு, பெண்கள் என்றென்றும் தீர்க்க சுமங்கலியாய் வாழ்வதற்கு அருள் புரிவாள் அம்மையவள் என்பதுதான் ஆடிப்பூரத்தின் வழிபாடு.
அன்றைய தினத்தில் காலையில் அம்பாளுக்கு பாலாபிஷேகம், மாலை ஊஞ்சல் உற்சவம் இரண்டும் கண்களால் தரிசனம் கண்டு பக்தி பரவசம் மழையில் நனைந்து அகம் முழுதும் மகிழ்வு காண்க.
அன்றைய தினத்தில் நாம் மஞ்சள் குங்குமம், தாலி சரடு, கண்ணாடி வளையல்கள் , மலர்கள் வைத்து அனைவருக்கும் கொடுப்பதும் சிறப்பு. நாம் பெற்று கொள்வதும் சிறப்பு.
எப்பொழுதும் நம்மை தாலாட்டி மகிழ்பவள் அம்பிகை . ஆடிப்பூரம் அன்று நாம் ஊஞ்சல் உற்சவத்தில் கலந்து கொண்டு அவளை தாலாட்டி மகிழ்வு காண்போம் . மகிழ்வதில் இனிது காண்போம்.
நெல்லையப்பர் கோவிலில் காந்திமதி அம்பாளுக்கு முளைக்கட்டு வைபவ விழா
திருநெல்வேலி மாவட்டம் நெல்லையப்பர் கோவில் ஆடிப்பூர திருவிழா கடந்த சில நாட்களாக மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. திருவிழாவில் சிகர நிகழ்ச்சியாக காந்திமதி அம்பாளுக்கு முளை கட்டுதல் திருவிழா வைபவம் நேற்று கோலாகலமாய் நடைபெற்றது.
தமிழகத்தில் மிகவும் புகழ்பெற்ற சிவாலயத்தில் ஒன்று நெல்லை மாவட்டத்தில் அமைந்துள்ள நெல்லையப்பர் கோவில் . அங்கு ஆடிப்பூரத் திருவிழா கடந்த 22 ஆம் தேதி அன்று கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டது .
இந்த விழாவில் வளைகாப்பு உற்சவம் 25ஆம் தேதியும், அதைத்தொடர்ந்து. செப்பு தேரோட்டம் நிகழ்ச்சியும் நடைபெற்றது. நேற்று காலை தீர்த்த வாரி நிகழ்ச்சி நடைபெற்றது.மாலையில் ஊஞ்சல் மண்டபத்தில் பச்சை புடவைதனில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு காந்திமதி அம்மன் எழுந்தருளினாள்.
சிறப்பாக பூஜைகள் நடைபெற்று அதன் பின்பு முளைகட்டிய பயிர்களை அம்பாளுக்கு மடிநிறைத்து முளைக்கட்டும் நிகழ்ச்சியும், தீபாராதனையும் நடைபெற்றது. மக்கள் திரளாக கலந்து கொண்டு அம்மனை ஸ்வாமி தரிசனம் செய்தனர்.
Image source: tamil-samayam.com