திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் இந்த ஆண்டு பருவ மழை செழிப்பாக பெய்த காரணத்தால் நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பியுள்ள நிலையில், மூன்று மாவட்டங்களிலும் பிசான பருவ நெல் சாகுபடி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விவசாய பணிகளுக்கு தேவையான உரங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் கடைகள் மூலம் தட்டுபாடில்லாமல் உரங்களை விற்பனை செய்ய தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் கேரளா மாநிலம் கொச்சியில் இருந்து அனுப்பிவைக்கப்பட்ட சுமார் 700 டன் பாக்டம்பாஸ் உரம் சரக்கு ரயில் மூலம் நேற்று நெல்லை வந்தடைந்தது. இதனை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் கஜேந்திர பாண்டியன் நேரடி மேற்பார்வையில் ஊழியர்கள் பிரித்து மூன்று மாவட்டங்களுக்கும் லாரிகளில் அனுப்பி வைத்தனர்.