உருவாய் அருவாய் உளதாய் இலதாய் மருவாய் மலராய் மணியாய் ஒளியாய் கருவாய் உயிராய் கதியாய் விதியாய் குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.
மயில் மீது அமர்ந்த கோலத்தில் முருகன் காட்சி தருகின்றான். மலையின் மீது நின்ற கோலத்தில் கந்தன் காட்சி தருகின்றான். குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் காட்சி தருகின்றான். யாமிருக்க பயமேன் என்று சிரித்தவாறு கதிர்வேலன் காட்சி தருகின்றான். தாமரை மலரில் குழந்தை வடிவத்திலே கார்த்திகேயன் காட்சி தருகின்றான். மேலும் பல அற்புதமான திரு காட்சிகள் தரும் எம் பெருமான் முருகனுக்கு மிகவும் பிடித்தமான தந்த சஷ்டி கவசம் பிறந்த வரலாறு தனை இந்த பதிவினில் காண்போம்.
கந்தர் சஷ்டி கவசம் பிறந்த வரலாறு
நன்றாக சிறப்பாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு மனிதர் திடீரென்று கடும்நோய்வாய்ப்பட்டு படுக்கையில் விழுகின்றார் .
கோடி கோடி சொத்து இருந்தும் சுகமின்றி படுத்துவிட்டால் வாழ்க்கையில் மகிழ்ச்சிதான் நிலைக்குமா! சுற்றியிருக்கும் பந்தம் தான் இனிக்குமா! !காண்கின்ற காட்சிகளில் லயிப்பதற்கு மனம்தான் விழையுமா!
நோயை குணப்படுத்த முடியாது என்ற சூழ்நிலையில்- சாகலாம் என்ற மனநிலைக்கு வந்து விடுகின்றார் அம்மனிதர்.
கடைசியாக ஒருமுறை திருச்செந்தூர் முருகனை தரிசனம் செய்து விடுவோம் என விரக்தியோடு திருச்செந்தூர் செல்கின்றார். கண்களை மூடி முழுக்கமுழுக்க முருகப்பெருமானை நினைத்து அகத்தினிலே கண்டவர்க்கோ! முருகப்பெருமான் நேரிலேயே காட்சி தருகின்றார் .
முருகனோ சிரிக்கின்றான்
பவளவாய் மலர்கின்றான்..
எம்மை நினைத்து ஒரு பதிகம் இயற்றுமாறும், அது உனக்கு மட்டுமல்ல உலகத்திற்கே நோய் தீர்க்கும் மருந்தாகவும் அமையும் -எனக் கூறி மறைந்துவிடுகிறான். அந்த நேரத்தில் மனிதரின் நாவினிலே உதிர்ந்தது மிக அழகான பதிகப் பாடல் ஒன்று.
அதே இடத்தில் அமர்ந்து பதிகம் இயற்றுகின்றார் .அவர்தான் பால தேவராயர். அவர் பாடிய பதிகமே கந்தர் சஷ்டி கவசம்.அவருடைய நோய் அவரை விட்டு அகன்றது .
திருச்செந்தூர் கடலினிலே நீராடி நோய் நொடி -பிணி பாவம் அனைத்தும் நீங்கப் பெற்றவராய்-ஆனந்தம் பெருக்கெடுத்து அறுபடை வீடுகள் அனைத்திற்கும் சென்று முருகப்பெருமானை வணங்கி ஆனந்தம் கொள்கின்றார். முருகப்பெருமானை புகழ்ந்து பதிகம் இயற்றுகிறார்.
அந்தப் பதிகம்தான் கந்த சஷ்டி கவசம் .எந்த பிணியையும் துயரத்தையும் போக்கக்கூடிய பதிகம். தலை முதல் பாதம் வரை ஒவ்வொரு உறுப்பையும் நலம் காக்க வேண்டி முருகப்பெருமானின் வேல் காக்க என தியானித்து பாடும் அற்புதமான பாடல்.
கந்தர்சஷ்டிகவசம் படிப்போர் கலக்கமடைய மாட்டார் என்பது மிகப்பெரிய உண்மை.
48 நாட்கள் அவன் புகழ் பாட பாட- நோய் நொடி அகலும் என்பதும் மிகவும் உண்மை அனைவரும் கந்த சஷ்டி படித்து முருகனின் புகழ் காண்போம்.
முருகா உன் பாதமே சரணம் சரணம் சரணம்..