திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெறும் கார் பருவ சாகுபடிக்காக சுமார் 10 ஆண்டுகளுக்கு பின்னர் கடந்த ஜூன் மாதம் முதல் தேதியன்று தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்நிலையில் சுமார் 25 ஆண்டுகளுக்கு பின்னர் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தாமிரபரணியின் மருதூர் அணைக்கட்டில் இருந்து மருதூர் கால்வாய்களில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள்.
தாமிரபரணியின் முக்கிய பாசன கால்வாய்களான மருதூர் மேலக்கால், மருதூர் கீழக்கால் ஆகியவற்றில் அணையில் போதிய தண்ணீர் இருப்பு இல்லாதது மற்றும் மாராமத்து பணிகள் நடைபெற்றது ஆகிய காரணங்களால் 1996 ஆம் ஆண்டுக்கு பின்னர் தண்ணீர் திறக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது கார் பருவ சாகுபடிக்காக அனைத்து கால்வாய்களிலும் திறக்கப்பட்டுள்ள நிலையில், மருதூர் மேலக்கால்வாய் மற்றும் கீழக்கால்வாய் ஆகியவற்றிலும் தண்ணீர் பாய்ந்து செல்கிறது. இதனால் மகிழ்ச்சியடைந்துள்ள விவசாயிகள் மருதூர் அணைக்கட்டில் உள்ள மருதவள்ளி மற்றும் சோழவள்ளி அம்மன் கோவில்களில் பட்டியலிட்டு சிறப்பு வழிபாடுகள் நடத்தி விவசாயம் செழிக்க வேண்டிக்கொண்டார்கள்!