தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று துவங்க உள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதி முறைகள் இன்று முதல் அமல்படுத்தப்பட உள்ளது. இந்நிலையில் தேர்தல் விதிமுறைகளை மீறுவோரை கண்காணிக்க மாவட்டத்தில் 15 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் தூத்துக்குடி மாநகராட்சிக்கு 4 ம், கோவில்பட்டி, காயல்பட்டினம், திருச்செந்தூர் நகராட்சி பகுதிகளுக்கு தலா ஒன்று வீதம் 3 ம், பேரூராட்சிகளுக்கும் சேர்த்து 8 ம் என மொத்தம் 15 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் ஒரு குழுவுக்கு 3 பேர் வீதம் மொத்தம் 45 பேர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் சேர்ந்து அந்தந்த வட்டார தேர்தல் பார்வையாளர்களும் தீவிரமாக கண்காணித்து தேர்தல் நடத்தை விதிகளை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.